1,700 கி.மீ. தூரத்தை 18 நாட்களில் கடந்து சாதனை படைத்த புறா

1,700 கி.மீ. தூரத்தை 18 நாட்களில் கடந்து புறா சாதனை படைத்தது.

Update: 2023-05-14 18:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர், கடந்த 25 ஆண்டு காலமாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். புறா வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 6 ஆண்டுகளாக பந்தய புறாக்களையும் வளர்த்து வருகிறார். அதற்கு பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது புறாக்களில் சுரை யாதி யாப்ஜி என்ற புறா மிகுந்த சுறுசுறுப்புடன் எவ்வளவு தொலைவில் விட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு வந்து அடையும். இந்த புறா பல இடங்களில் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதற்கான சான்றிதழ், கோப்பைகளும் பெற்றுள்ளது. இந்நிலையில் டி.ஆர்.பி.எப். என்ற அமைப்பின் சார்பில், டெல்லி ஜான்சியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பந்தயத்தில் சுரை யாதி யாப்ஜி புறா கலந்து கொண்டது. இதேபோல் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இருந்து 44 புறாக்கள் கலந்து கொண்டன. இதில் பந்தயத்தில் கலந்து கொண்ட சுரை யாதி யாப்ஜி புறா சுமார் 1,700 கிலோ மீட்டர் வரை 18 நாட்களில் கடந்து வந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் முதல் இடத்தையும், தென்னிந்திய அளவில் நான்காவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. 18 நாட்களில் சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தமிழகத்தின் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றதால் புறாவின் உரிமையாளர் முகமது சாதிக்கை, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் இருந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து வந்து முதலிடம் பிடித்த புறாவை அப்பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்