வேனில் கடத்தி வந்த 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தஞ்சை அருகே வேனில் கடத்தி வந்த 170 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
தஞ்சையை அடுத்த வல்லம் - ஒரத்தநாடு சாலையில் உள்ள மின்நகர் பகுதியில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா தலைமையில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். வல்லம் சாலையில் வந்த ஆம்னி வேனை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. பின்னர் வேனை ஓட்டிவந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது, பறிமுதல்
விசாரணையில், அவர் தஞ்சை வெட்டுகார தெருவை சேர்ந்த கிரிதரன் (வயது 27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிதரனை கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 170 கிலோ புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.