ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக பரபரப்பு: 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை

ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடலை வாங்க மறுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-16 22:45 GMT

சிறுமி கடத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென மாயமானார். அவருடைய தந்தை கைகலத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தன்னுடைய மகளை வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 4 பேர் கடத்தி சென்றதாக கூறி உள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மணிகண்டன் மற்றும் அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். போலீசாரின் விசாரணையில், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் சிறுமியை மணிகண்டன் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் சிறுமிக்கு போலீசார் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

விஷம் குடித்த சிறுமி சாவு

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி அந்த சிறுமி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆஸ்பத்திரியில் உள்ள பொது மருத்துவ கட்டிடம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-

17 வயது சிறுமியை மணிகண்டன் உள்பட சிலர் கடத்தி சென்று திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர். அவரை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர். இந்த நிலையில் போலீசார் சிறுமியை மீட்ட பிறகு கடந்த மாதம் மணிகண்டன் உள்பட சிலர் வீட்டுக்கு வந்து சிறுமியை மீண்டும் மிரட்டி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மணிகண்டன் உள்பட அனைவரது மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், சிறுமியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்