17 பள்ளி பஸ்களை இயக்க தடை
தேனி மாவட்டத்தில் பராமரிப்பு குறைபாடு காரணமாக 17 பள்ளி பஸ்களை இயக்க தடை விதித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன்பு, அனைத்து தனியார் பள்ளிகளின் வாகனங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து துறையினர் பள்ளி வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவது வழக்கமாக உள்ளது.
அதன்படி, தேனி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கான முகாம் நேற்று நடந்தது. இதற்கான தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தும் வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
நல வாரியத்தில் பதிவு
இந்த ஆய்வு பணியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கலெக்டருடன், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பள்ளி வாகனங்களின் ஆய்வுப் பணிகளை பார்வையிட்டார். மேலும், அங்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சார்பில் பள்ளி வாகன டிரைவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம், தொழிலாளர் நலத்துறை சார்பில் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவு முகாம் மற்றும் டிரைவர்களுக்கான ஆலோசனை வழங்கும் முகாம் நடந்தது.
முகாம்களை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார். பின்னர், பாதுகாப்பாக வாகனம் ஓட்டிய 30 டிரைவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் முகாமில், 15 பேர் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டனர்.
17 பஸ்களுக்கு தடை
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் ஷஜீவனா கூறும்போது, 'மாவட்டத்தில் மொத்தம் 710 பள்ளி வாகனங்கள் உள்ளன. தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் 427 வாகனங்களும், உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 283 வாகனங்களும் உள்ளன. தேனியில் முதல் நாளில் 359 வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அவசரகால வழி உள்ளதா? அது சரியாக இயங்குகிறதா? முதலுதவி பெட்டி பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டதுடன், ஏறி, இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். வாகனத்தின் தரைப்பலகையின் உறுதித்தன்மை, வாகனத்தின் முன்புறம், பின்புறம் பொருத்தப்பட்ட கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பராமரிப்பில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 17 பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. அந்த வாகனங்கள் குறைபாடுகளை சரி செய்து மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். விடுபட்ட வாகனங்கள் நாளை (சனிக்கிழமை) வரை தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். அதுபோல், உத்தமபாளையத்திலும் நாளை பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்' என்றார்.
இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் தலைமையில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், அரசு மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.