வீட்டில் பதுக்கிய 169 பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே அனுமதி இல்லாமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 169 பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2023-10-20 20:00 GMT

நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையில் பட்டாசு விபத்துகளை தடுக்க உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


இந்த நிலையில் பொள்ளாச்சி பணிக்கம்பட்டி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகளும் வந்து விசாரித்தனர்.


விசாரணையில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான வெங்கிடுபதி (வயது 65) என்பவர் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தீபாவளி பண்டிகைக்கு கடை அமைத்து பட்டாசு விற்பனை செய்வதற்கு விண்ணப்பித்து உள்ளார். இதற்கிடையில் ஆர்டர் செய்த பட்டாசுகள் வந்து விட்டதால் தனது வீட்டிற்கு வெளியே வளாகத்தில் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.


வீட்டில் எந்தவித அனுமதி பெறாமல் வைத்திருந்த 169 பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், வெங்கிடுபதி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்