166 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக 166 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-11-03 18:31 GMT

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக 166 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

166 ஏரிகள் முழுகொள்ளளவு

வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, ஆறு, அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன.

இதில், 12 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் கோடி போகிறது. ஒரு ஏரியில் 80 சதவீதமும், 4 ஏரிகளில் 51 முதல் 70 சதவீதமும், 60 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 24 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது.

அதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. 7 ஏரிகளில் 81 முதல் 90 சதவீதமும், 11 ஏரிகளில் 71 முதல் 80 சதவீதமும், 53 ஏரிகளில் 51 முதல் 70 சதவீதமும், 143 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 30 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீர் நிரம்பி உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. 2 ஏரிகளில் 81 முதல் 90 சதவீதமும், ஒரு ஏரியில் 71 முதல் 80 சதவீதமும், 4 ஏரிகளில் 51 முதல் 70 சதவீதமும், 9 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 4 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீர் காணப்படுகின்றன என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு முழுமையாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதனால் பல ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்