5 மையங்களில் 1,654 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர்

திருவாரூர் மாவட்டத்தில் 5 மையங்களில் 1,654 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

Update: 2023-05-06 18:45 GMT

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் 5 மையங்களில் 1,654 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

நீட் தேர்வு

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

அதன்படி ஆண்டுதோறும் மாணவர்களிடையே நீட் தேர்வு எழுதும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த நுழைவு சீட்டில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் உள்ள எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

5 தேர்வு மையங்கள்

அதன்படி திருவாரூர் மாவட்ட மாணவர்களுக்காக திருவாரூர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் 5 மையங்களில் நடக்கிறது. அதன்படி திருவாரூர் நகரில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, தி டிரினிட்டி அகாடமி சி.பி.எஸ்.இ. சீனியர் பள்ளி, கேந்திரியா வித்யாலயா, கூத்தாநல்லூரில் உள்ள டெல்டா பப்ளிக் பள்ளி, திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள எஸ்.வி.எஸ். இன்டர்நேசினல் பள்ளி ஆகிய 5 மையங்களில் நீட் தேர்வானது நடக்கிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 1,654 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கும் இந்த தேர்வில், வழக்கம் போல கடுமையான கெடுபிடிகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு எழுத உள்ள மாணவ- மாணவிகள் முன்னதாக ஒரு மணி நேரத்துக்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி 5 தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்