காரில் கடத்தி வரப்பட்ட 164 கிலோ குட்கா, ரூ.5¾ லட்சம் சிக்கியது

காவேரிப்பாக்கத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 164 கிலோ குட்கா, ரூ.5¾ லட்சம் சிக்கியது. இது தொடர்பாக கார் டிரைவர் உள்பட 5 பேர் ைகது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-16 18:28 GMT

காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 164 கிலோ குட்கா, ரூ.5¾ லட்சம் சிக்கியது. இது தொடர்பாக கார் டிரைவர் உள்பட 5 பேர் ைகது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் வாணியன்சத்திரம் ஜங்ஷன் அருகே நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட 164 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பேராராம் (வயது 38) என்பது தெரிய வந்தது.

164 கிலோ குட்கா, பணம் பறிமுதல்

மேலும் அவர் காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு குட்காபொருட்களை வினியோகம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 இலட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணமும் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றபட்டது.

தொடர்ந்து கார் மற்றும் 164 கிலோ குட்கா, ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் டிரைவர் பேராராமிடமிருந்து விற்பனைக்காக குட்கா பொருட்களை வாங்கியதாக காவேரிப்பாக்கம் போலீஸ் லைன் தெருவில் வசிக்கும் அக்பர் பாஷா (49), பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தில் பெரிய தெருவில் வசிக்கும் பாரதிராஜா என்பவரின் மகன் செல்வம் (29), புதுப்பட்டு பெரிய தெருவில் வசிக்கும் பார்த்திபன் மகன் ஹரிதாசன் (38), ஜாகீர்தண்டலம் பெரிய தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் மகன் கோபி (29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்தும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

பேராராமிடம் தடை செய்யப்பட்ட பொருட்களை கொடுத்து வினியோகம் செய்யவைத்ததாக வாலாஜாவை சேர்ந்த கல்லுராம் மற்றும் பனப்பாக்கத்தை சேர்ந்த பாரதிராஜா ஆகியோரை காவேரிப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்