போக்குவரத்துக்கழக பணியாளர்கள் 1,626 பேருக்கு ரூ.308 கோடி பணப்பலன்

போக்குவரத்துக்கழக பணியாளர்கள் 1,626 பேருக்கு ரூ.308 கோடி பணப்பலனை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Update: 2023-03-27 21:28 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 867 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் ரூ.551.12 கோடி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி முதல்கட்டமாக 1,241 பேருக்கு பணப்பலன்கள் ரூ.242.67 கோடி வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 பேருக்கான ரூ.308.45 கோடி பணப்பலன்களை வழங்கிடும் விதமாக 23 பேருக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அலுவலத்தில் பணப்பலன்களை வழங்கினார்.

மீதமுள்ள 1,603 பேருக்கு அந்தந்த போக்குவரத்துக்கழக நிர்வாகத்தின் மூலம் பணப்பலன்களுக்கான காசோலைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்