பழங்குடியினர் வசதிக்காக ரூ.160 கோடியில் சாலைகள் மேம்பாடு - வனத்துறை அமைச்சர் தகவல்

பழங்குடியினர் வசதிக்காக ரூ.160 கோடியில் சாலைகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-22 17:04 GMT

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இன்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் அலுவலர்களுடன் வனத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் ராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வசதிக்காக நடப்பாண்டில் 100 கி.மீ. நீள சாலைகளை ரூ.160 கோடி மதிப்பில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள 3 ஆயிரத்து 454 கி.மீ. சாலைகளை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தவும், நெடுஞ்சாலைகளுக்கான வனப்பகுதி இணைப்பு சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க அகழிகளை பராமரிக்க பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கான ஊதியம் நிலுவையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூழல் சுற்றுலா மையங்கள் மேம்பாடு, வன விலங்குகளால் மனித உயிரிழப்பு தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை துரிதப்படுத்த வேண்டும்.

வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் முதல்கட்டமாக நடப்பாண்டில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக 1.77 கோடி மரக்கன்றுகளின் நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக இதுவரை ரூ.11 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வரும் ஆண்டுகளில் 32 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்