சென்னை, கடலூர் உள்பட 16 இடங்களில் வெயில் சதம் - மதுரையில் அதிகபட்சமாக 105 டிகிரி பதிவு...!
சென்னை, கடலூர் உள்பட 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. பெரும்பாலான இடங்களில் இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட குறைந்த ஒரு டிகிரி முதல் அதிகபட்சம் 5 டிகிரி வரை வெப்பம் பதிவாகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று அனைத்து இடங்களிலும் வெயில் இயல்பைவிட அதிகமாகவே பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக கரூர், மதுரையில் 5 டிகிரியும், பாளையங்கோட்டை, திருப்பத்தூர், வால்பாறையில் 3 டிகிரியும் இயல்பைவிட அதிகமாக வெயில் இருந்தது. இன்று மட்டும் 16 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 105.44 டிகிரி வெப்பம் பதிவானது.
அதற்கடுத்தபடியாக கடலூர், மதுரை நகரம், நாகப்பட்டினம், சென்னை நுங்கம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை உள்பட 16 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து இருந்தது. அதேபோல் நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.