குற்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்ட 16 பேர் அதிரடி கைது

ராமநாதபுரத்தில் கோர்ட்டு வளாகத்தில் விசாரணை அறையில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்து இதுவரை 16 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-06-15 18:45 GMT

ராமநாதபுரத்தில் கோர்ட்டு வளாகத்தில் விசாரணை அறையில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்து இதுவரை 16 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் விவர பட்டியல்

ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டினர்.. மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையின் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள், பழைய குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விரிவான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள நபர்களின் விவரங்கள், அவர்களின் குற்ற செயல்கள் விவரங்கள், குடும்ப பின்னணி, துணையாக உள்ள நபர்கள் போன்ற முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

16 பேர் கைது

இதன்படி போலீசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வந்தவர்களில் சிலர் குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் சதி செயல் திட்டம் தீட்டுதல், ஒன்று கூடி திட்டமிடுதல், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் இதுவரை மாவட்டம் முழுவதும் 16 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரின் மேற்கண்ட பட்டியலில் உள்ள நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட முயன்றாலோ, அதற்கான நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வந்தாலோ உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் நகரில் இரவு நேரங்களில் தேவையின்றி யாரும் சுற்றி திரிவது, கூட்டமாக கூடி நின்று தேவையின்றி பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக ஹலோ போலீஸ் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த தகவலை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்