லாரி கிளீனர் வீட்டில் ரூ.16 லட்சம் நகை-பணம் திருட்டு
ஜவ்வாதுமலையில் லாரி கிளீனர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடிய மர்ம நபர்கள், பத்திரங்கள், சான்றிதழ்களை தீ வைத்து எரித்துள்ளனர்.;
போலீஸ் விசாரணைக்கு
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு ஊராட்சி கண்ட கள்ளவூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), லாரி கிளீனர். இவரது மனைவி நாச்சி (35). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, அவரது மகன் முருகன் (40) என்பவருக்கும் வரப்பு தகராறு ஏற்பட்டதில் ராமசாமி காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாளை போலீசார் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி பெருமாள் மற்றும் அவரது மனைவி நாச்சி கடந்த 30-ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு திருப்பத்தூர் வந்துள்ளனர். பின்னர் அங்கு அவரது உறவினர் பெருமாள் என்பவர் விட்டில் தங்கி விட்டு, போலீசாக தேர்வு பெற்று வேலூரில் பயிற்சியில் உள்ள மகளை பார்க்க நேற்று வேலூர் சென்றுள்ளனர்.
நகை, பணம் திருட்டு
இந்த நிலையில் இவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக பெருமாள் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வீடு மற்றும் நில பத்திரங்கள், மகள், மகன் பள்ளி சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருந்தது.
மேலும் பீரோவில் இருந்து 32 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் பெருமாள் உறவினர்கள் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு யாராவது செய்தார்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.