முட்டம் கடல் பகுதிக்குள் புகுந்த 16 கேரள விசைப்படகுகள்

முட்டம் கடல் பகுதிக்குள் புகுந்த 16 கேரள விசைப்படகுகள் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2023-02-07 20:26 GMT

ராஜாக்கமங்கலம்:

முட்டம் கடல் பகுதிக்குள் புகுந்த 16 கேரள விசைப்படகுகள் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

கேரள விசைப்படகுகள்

வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தில் தனியார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுக கடல் பகுதியில் நேற்று முன்தினம் கேரள பதிவு கொண்ட 16 விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

இதற்காக முட்டம் மீன்பிடி துறைமுக நிர்வாகத்திடம் அவர்கள் எந்தவித அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த குமரி மாவட்ட கியூ பிரிவு போலீசார் முட்டம் பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கேரள படகுகள் நிறுத்தப்பட்டிருந்த கடல் பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விசைப்படகுகள் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது.

போலீசாரின் சோதனையில் படகுகளில் மீன்கள் எதுவும் இல்லை. மீன் பிடிக்கும் வலை போன்ற உபகரணங்கள் மட்டுமே இருந்தன. படகுகளில் கேரள மீனவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களும் இருந்தனர். ஆயுதம் போன்ற பொருட்கள் இல்லாததால் போலீசார் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் முட்டம் துறைமுகப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் 8 படகுகள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றன. மீதம் உள்ள படகுகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. அந்த படகுகளை முட்டம் தனியார் மீன்பிடி துறைமுக நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

திருவிழாவுக்கு...

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், "கேரள விசைப்படகுகளில் குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழாவில் கலந்துகொள்ள படகுகளில் வந்திருக்கலாம். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் முட்டம் கடல் பகுதியில் படகுகளை நிறுத்தியிருக்கலாம்" என தெரிவித்தனர். இதுகுறித்தும் கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்