சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Update: 2023-08-24 19:48 GMT

வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் சார்பில் பண்டிகை உள்ளிட்ட முக்கிய திருவிழா நாட்களில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, வார இறுதி நாட்கள் விடுமுறையிலும் சேலம் கோட்டம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலைக்கு...

சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதுதவிர, வருகிற 30-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக 29, 30-ந் தேதிகளில் சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்