உண்ணாவிரதம் இருந்த 150 விவசாயிகள் கைது

Update: 2023-09-25 17:07 GMT


காங்கயத்தில் உண்ணாவிரதம் இருந்த 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க பாசன விவசாயிகள் சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். நேற்று ஒரு விவசாயி உண்ணாவிரத மேடையில் மயக்கமடைந்தார். உடனே அவர் காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் 4-வது நாளாக இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ் குமார் மற்றும் பா.ஜ.க.சார்பில் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி, மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன், மாவட்ட இளைஞர் தலைவர் விசாகன், இளைஞர் அணிச் செயலாளர் அண்ணாமலையார் ராஜ்குமார், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மண்டல தலைவர்கள் ரமேஷ், கேபிள் ராசு மற்றும் கார்த்திக் ராஜா, வெள்ளகோவில் நகர தலைவர் அருண்குமார், காங்கயம் நகர தலைவர் சிவபிரகாஷ், தாராபுரம் நகரத் தலைவர் சதீஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத்தலைவர் கலா நடராஜன், விஜயகுமார் மற்றும் மாவட்ட செயலாளர் கருப்புசாமி உள்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மரத்தில் இருந்து தவறி விழுந்தார்

4-வது நாள் போராட்டத்திலும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காங்கயம் தாசில்தார் அலுவலகம் முன்பு திரளாக கூடினர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால் கூட்டத்தில் இருந்த சுரேஷ் (35 வயது) தாசில்தாரை பார்க்க விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அருகே இருந்த மரத்தில் ஏறி கோஷமிடும் போது தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அவர் உடனடியாக காங்கயம் தலைமை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் தாசில்தார் மற்றும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டத்தை அடுத்து உடனே போலீசார் விவசாயிகள் 150 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்