கோவை
கோவை மாநகர பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.150 கோடிக்கு பட்டாசு விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.50 கோடி அதிகம் ஆகும்.
தீபாவளி பண்டிகை
பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும்தான். பண்டிகையன்று காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதில் சிறுவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பட்டாசுகளை வெடிப்பார்கள்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையன்று பலர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என்று நேரக்கட்டுப்பாடுகள் விதித்து இருந்தாலும், கோவையில் சிலர் அதை கடைபிடித்து அந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடித்தனர்.
பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் இரவு 10 மணிவரை பட்டாசுகளை வெடித்துக்கொண்டே இருந்தனர். இதன் காரணமாக மாநகர பகுதியில் பல இடங்களில் பட்டாசு குப்பைகள் குவிந்து கிடந்தன. கடந்த 24-ந் தேதி தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டது என்றாலும் நேற்றும் பல இடங்களில் சிறுவர்கள் பலர் பட்டாசுகளை வெடித்தனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் மத்தாப்பு, தரைச்சக்கரம், புஷ்வானம் போன்ற ஒலி எழுப்பாத பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதன்படி கோவையில் நடந்த பட்டாசுகளின் விற்பனை குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ரூ.150 கோடிக்கு விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதியில் கடந்த 15-ந் தேதி முதல் நேற்று வரை பட்டாசு கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் 290 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது.
15-ந் தேதியே பட்டாசுகளின் விற்பனை தொடங்கிவிட்டது என்றாலும் கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில்தான் பட்டாசுகளின் விற்பனை களைகட்டியது. மொத்தத்தில் மாநகர பகுதியில் மட்டும் இந்த ஆண்டில் ரூ.150 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.50 கோடி அதிகம் ஆகும்.
வண்ண பட்டாசுகள்
இந்த ஆண்டில் இரவு நேரத்தில் பல்வேறு வண்ணங்களில் வெடிக்கக்கூடிய பட்டாசுகள்தான் அதிகளவில் இளைஞர்கள் கேட்டு வாங்கிச்சென்றனர். அதற்கு அடுத்தபடியாக ஒலி எழுப்பாத பட்டாசுகளை பெண்கள், குழந்தைகள் வாங்கினார்கள். பொதுவாக ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அது பட்டாசு வியாபாரிகளையும் அதிகளவில் பாதித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.