தடையை மீறி போராட்டம் நடத்த வந்த உறவினர்கள் உள்பட 15 பேர் கைது

தடையை மீறி போராட்டம் நடத்த வந்த உறவினர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-21 20:13 GMT

திருச்சி திருவெறும்பூர் நொச்சிவயல்புதூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான வித்யாலட்சுமி கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது வாயில் சிலர் விஷம் ஊற்றி கொலை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து திருவெறும்பூர் போலீசார், தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவரை கைது செய்தனர். அவர், கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதல்-அமைச்சர் வரை மனு கொடுத்தனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மற்ற குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அந்த வழக்கை மறுவிசாரணை நடத்தி உரிய நீதி வழங்க வலியுறுத்தியும் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு நிர்வாகிகள், மாணவியின் குடும்பத்தினர் சுமார் 15 பேர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்தனர். அவர்கள் கோஷம் எழுப்பிய படி கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அவர்களை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்