15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-10-01 20:45 GMT

தொடர்மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநகராட்சியில் உள்ள 48 வார்டு பகுதிகளிலும் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் மழைநீரில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு புழுக்கள் அதிகமாக உருவாகின்றன. இதையடுத்து மழைநீர் தேங்குமாறு திறந்தவெளியில் கிடக்கும் டயர்கள், இளநீர் ஓடுகள், சிரட்டை, உரல் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அகற்றி வருகின்றனர்.

இருந்த போதிலும் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 50 பேர் வரை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தனி வார்டு

அதிலும் சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கும், டெங்குவால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கும் தனித்தனியாக வார்டு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டில் மொத்தம் 87 படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கைகள் அனைத்துக்கும் கொசுவலை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 44 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிவார்டுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 மணி நேரத்துக்கு ஒருமுறை

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்வெப்ப நிலையை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை டாக்டர்கள் சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தேவையான அளவு ரத்த அணுக்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 3 வேளையும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் கஞ்சி, ஓ.ஆர்.எஸ். கரைசல் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து உடல்நலமும் மேம்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்