நகை வியாபாரி வீட்டில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
நெல்லை சிந்துபூந்துறையில் மொத்தநகை வியாபாரி வீட்டில் 1.5 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை சிந்துபூந்துறையில் மொத்தநகை வியாபாரியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுமந்தராம் என்பவர் தனது தாய்மாமாவுடன் சேர்ந்து நெல்லூர் பகுதியில் இருந்து நகைகளை வாங்கி திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் நகைகளை வைத்து விட்டு பக்கத்து மாவட்டங்களில் உள்ள கடைகளில் கொடுத்த நகைக்கான பணத்தை வசூல் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போயுள்ளன. 1.5 கிலோ தங்கநகைகள் காணாமல் போனதாக நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் பூட்டை திறந்து மர்மநபர்கள் நகைகளை எடுத்துச் சென்றிருப்பதாக போலீசாருக்கு கிடைத்துள்ள முதல்கட்ட தகவலின்படி தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களையும் தேடி வருகின்றனர்.