ரெயில்களில் திருடப்பட்டு விற்கப்பட்ட 15 செல்போன்கள் பறிமுதல்

மராட்டிய மாநிலத்தில் ரெயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 15 செல்போன்களை வேலூர் போலீசார் பறிமுதல் செய்து அந்த மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-04-22 17:18 GMT

மராட்டிய மாநிலத்தில் ரெயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 15 செல்போன்களை வேலூர் போலீசார் பறிமுதல் செய்து அந்த மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரெயில்களில் திருட்டு

மராட்டிய மாநிலத்தில் ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் இருந்து செல்போன்கள் திருட்டு போகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இதுகுறித்து கோல்காபூர் போலீசில் பலர் புகார்கள் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு போன செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் அவற்றை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருட்டு போனவற்றில் 30 செல்போன்கள் வேலூர் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோல்காபூர் போலீசார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து செல்போன்களின் விவரங்களை அனுப்பி வைத்தனர்.

15 செல்போன்கள் பறிமுதல்

அதன்பேரில் வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் 15 செல்போன்களை பறிமுதல் செய்யும் பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இவற்றில் பெரும்பாலான செல்போன்கள் கடைகளில் இருந்து பலர் வாங்கி பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், ரெயில்களில் திருடிய மர்மகும்பல் உரிய ஆவணங்கள் இன்றி தனித்தனியாக குறைந்த விலைக்கு அந்த செல்போனை கடையில் விற்பனை செய்ததும், அவற்றை கடைக்காரர்கள் பொதுமக்களுக்கு விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 15 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களிடம் இனிமேல் உரிய ஆவணங்கள் இன்றி யாரிடமும் இருந்தும் செல்போன்கள் வாங்கக் கூடாது என்று எச்சரித்தனர்.

போலீசாரிடம் ஒப்படைப்பு

அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உறுதி செய்வதற்காக ஒரு செல்போனை கொரியர் மூலம் கோல்காபூர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதனை உறுதி செய்த போலீசார் மற்ற செல்போன்களை வாங்கி செல்வதற்காக இன்ஸ்பெக்டர் சாகர்வாலி தலைமையில் 5 பேர் நேற்று வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் வந்தனர்.

அவர்களிடம் மீதமுள்ள 14 செல்போன்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் ஒப்படைத்தனர். மீதமுள்ள 15 செல்போன்களை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்ட மர்மகும்பல் குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்