14-ம் நூற்றாண்டை சேர்ந்த வில்வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

நத்தம் அருகே 14-ம் நூற்றாண்டை சேர்ந்த வில்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-05 16:52 GMT

கல்வீரன் நடுகல்

பழனி அருகே நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் கருப்பையா மற்றும் ஆற்றூர் நாடு வரலாற்று ஆய்வு மையக்குழுவை சேர்ந்த மாணிக்கராஜ், சுப்பு உலகநாத பாண்டியன், ராமு ஆகியோர் நத்தம் அருகே மணக்காட்டூர் பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த ஊரில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த வில்வீரன் நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்த நடுகல், இப்பகுதி மக்களால் அப்புச்சி என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுக்குழுவினர் கூறியதாவது:-

பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல சிறுநாடுகளாக பிரித்தனர். அதன்படி, இந்த பகுதி புறமலை நாட்டு பிரிவை சேர்ந்தது. இங்கு வாழ்ந்த வில்வீரன் ஒருவனின் மரணத்தின் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்கலாம். இந்த நடுகல் 3.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் வீரன் தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில், வீரனின் முகம் தேய்ந்த நிலையில் உள்ளது.

தெய்வமாக வணங்கும் மக்கள்

வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை பிடித்தவாறும், இடது கையில் வில்லின் நடுப்பகுதியான நாபியை பிடித்தவாறும் நடுகல்லில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு வலது பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்ட கொண்டையும், வீரனுக்கே உரிய விரிந்த மார்புடனும், இடை சிறிதாக வீரனுக்குரிய உடல் அமைப்புடனும் அழகாக சிற்பம் வெட்டப்பட்டிருக்கிறது. இந்த நடுகல் வீரனின் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் மண்ணில் புதைந்து காணப்படுவதால், வீரனின் ஆடை மற்றும் காலில் அணிவிக்கப்பட்டு இருக்கும் அணிகலன்களை அறிந்துகொள்ள முடியவில்லை.

பண்டைய காலத்தில் மக்கள் விலங்குகளை உணவுக்காக வேட்டையாடும்போது அவற்றுடன் சண்டையிட்டு இறப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளில் வீர மரணம் அடையும் வீரர்களின் நினைவாக கல்நட்டு அவர்களை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் பண்பாட்டு மரபாகும் என்பதை இலக்கியங்கள், கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. அந்த வகையில் இந்த வில்வீரன் நடுகல்லும் சான்றாக உள்ளது. இந்த வில்வீரன் நடுகல்லை இப்பகுதி மக்கள் அப்புச்சி என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்