குறுவை நெல் சாகுபடிக்கு 1,461 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது

குறுவை நெல் சாகுபடிக்காக 1,461 டன் யூரியா உரம் சென்னையில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.;

Update: 2023-04-04 19:09 GMT

குறுவை நெல் சாகுபடிக்காக 1,461 டன் யூரியா உரம் சென்னையில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும்.தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி கடந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி அணை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1,461 டன் யூரியா உரம்

இதையொட்டி தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம் மற்றும் இடுபொருட்கள் தேவையான அளவு வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 25 வேன்களில் 1,461 டன் யூரியா உரம் நேற்று தஞ்சை வந்தது. இந்த உரமூட்டைகள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்