காட்பாடி ரெயில் நிலையத்துக்கு 1,450 டன் யூரியா உரம் வந்தது

சென்னையில் இருந்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 1,450 டன் யூரியா உரம் நேற்று வந்தது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-12-30 17:21 GMT

1450 டன் யூரியா உரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் அந்தந்த மாவட்டங்களில் அதிகளவு இருப்பு வைத்து விநியோகம் செய்யும்படி வேளாண்மைத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் சேதமானால் அதற்கு இழப்பீடு வழங்கும் வகையில் பயிர் காப்பீடு செய்யும்படி விவசாயிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் விவசாயத்திற்கு தேவையான 1,450 டன் யூரியா சென்னை மணலியில் இருந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சரக்கு ரெயிலில் நேற்று வந்தது. பின்னர் அந்த யூரியா மூட்டைகள் மாவட்டம் வாரியாக பிரித்து லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி நடந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 350 டன், ராணிப்பேட்டைக்கு 950 டன், திருப்பத்தூருக்கு 50 டன், காஞ்சிபுரத்திற்கு 25 டன், செங்கல்பட்டுக்கு 75 டன் என வேளாண்மை அதிகாரிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

தட்டுப்பாடு இன்றி கிடைக்க

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் உரங்கள் இருப்பு உள்ளது.

எந்தெந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறதோ அந்தந்த பகுதி விவசாயிளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். அரசு நிர்ணயித்துள்ள விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்