புதிதாக 1,411 மகளிர் சுயஉதவிக்குழுக்கள்

கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் புதிதாக 1,411 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

Update: 2023-07-03 20:59 GMT

கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் புதிதாக 1,411 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதன் முதலாக...

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் முதன்முதலாக மகளிர் சுயஉதவிக்குழு தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தொடங்கப்பட்டன. கடந்த 1996-ம் ஆண்டு மீண்டும் கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. முதலில் 5 ஆயிரத்து 177 சுய உதவிக்குழுக்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 7 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 14 மகளிர் சுய உதவிக் குழுக்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 8 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 29 சுய உதவிக்குழுக்களும் தொடங்கப்பட்டன. தற்போது தமிழ்நாடு முழுவதும் 4.48 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு மகுடமாக இருப்பது சுழல் நிதி. இந்த சுழல் நிதி பெண்கள், பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது. ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் வழங்க குறுந்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.

சுழல் நிதி

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கவும், அந்த கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதில் ரூ.10 லட்சம் முதல் முதல் ரூ.1½ கோடி வரை கடன் பெறலாம்.. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 8,730-ம், நகர்ப்புற பகுதிகளில் 6,201-ம் என மொத்தம் 14,931 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

அதில் 2022-23 மற்றும் 2023-24-ம் என 2 ஆண்டுகளில் மட்டும் 1,411 புதிய மகளிர் சுயஉதவிகுழு அமைக்கப்பட்டுள்ளன. சுழல்நிதி கடனாக 544 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.81.60 லட்சம் கடனுதவிகளும், சமுதாய முதலீட்டு நிதியாக 161 குழுக்களுக்கு ரூ.2.21 கோடி கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 18 ஆயிரத்து 779 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1020.52 கோடி வங்கிகடன் பெற்று தரப்பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 156 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.52.99 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்புற பகுதிகளில் 878 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்