ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை
ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆவுடையானூரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 88). இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி ஆவர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ராணி பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக உள்ளார். மற்ற 2 பேரும் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கின்றனர்.
முகமூடி கொள்ளையர்கள்
நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் வயதான தம்பதியர் இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். ஜாய் சொர்ணதேவி வீட்டின் வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர்கள் 3 பேர், வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.
அவர்கள் வராண்டாவில் இருந்த பல்புகளை உடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாய் சொர்ணதேவி கூச்சலிட முயன்றார். அப்போது மர்மநபர்கள் அவரது வாயில் துணியை திணித்து, கைகளை கட்டி வீட்டுக்குள் இழுத்து சென்றனர். வீட்டின் உள்ளே அருணாச்சலம் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் தனது மனைவியை முகமூடி கொள்ளையர்கள் இழுத்து வருவதை பார்த்ததும் கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர்கள் அவரின் வாயையும் துணியால் பொத்தி கைகளை கட்டினர். பின்னர் தம்பதியரின் கால்களை கட்டி அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினர்.
140 பவுன்-ரூ.10 லட்சம் கொள்ளை
அதன்பிறகு கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 140 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு வந்த ராணி தனது பெற்றோர் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்ததையும், பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் பெற்றோரின் கை, கால் கட்டுகளை அவிழ்த்து அவர்களை விடுவித்துவிட்டு, இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.