கோழிப்பண்ணையில் பதுக்கிய 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சாத்தூர் அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 14 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 14 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோழிபண்ணை
மதுரை மண்டல உணவுப் பொருள்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் நேற்று ரகசிய தகவலின் பெயரில் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணை வட்டாரத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏழாயிரம் பண்ணை ஆசிரியர் காலனியை சேர்ந்த ஜெகன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் ரேஷன் அரிசி மூடைகள் ஒரு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு தலா 50 கிலோ கொண்ட 275 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் வீடுகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரிக்க அவர்கள் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களும் அங்கு நின்று கொண்டிருந்தன.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 275 ரேஷன் அரிசி மூடைகளில் இருந்த 13.75 டன் ரேஷன் அரிசியையும் 4 இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
இதனை தொடர்ந்து கோழி பண்ணை உரிமையாளர் ஜெகன், ரேஷன் அரிசி உரிமையாளர் விருதுநகரை சேர்ந்த கோட்டூர் மணி, கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற பாம்பு கனி, ரேஷன் அரிசி ஏஜெண்டுகள் தூத்துக்குடியை சேர்ந்த கற்பக பிரகாஷ், மணி பிரபு ஆகியோர் மீது உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஜெகனை மட்டும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.