14 ஆயிரத்து 826 ஏக்கர் பரப்பில் சாமை சாகுபடி
திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக 14 ஆயிரத்து 826 ஏக்கர் பரப்பில் சாமை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக 14 ஆயிரத்து 826 ஏக்கர் பரப்பில் சாமை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாமை சாகுபடி
சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும்.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதை சாப்பிட வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாமை பயிர் சராசரியாக 14 ஆயிரத்து 826 ஏக்கர் பரப்பில் காரீப் பருவத்தில் ஜமுனாமரத்தூர் வட்டாரத்தில் அதிக அளவிலும் மற்ற வட்டாரங்களிலும் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், சிறுதானிய பயிர் உபயோகத்தினை அதிகரிக்கவும் வேளாண்மைத் துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் வேளாண்மை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சாமை உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்கி கொள்ளலாம்.
மக்கிய தொழு உரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோ.4, ஏ.டி.எல்.1 சாமை ரகங்கள் பயிரிடப்படுகிறது.
ஆடிப்பட்டம் (ஜூன் - ஜூலை), புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர் - அக்டோபர்) ஆகிய மாதங்களில் சாமை சாகுபடிக்கு உகந்ததாகும். சாமை சிறுதானியம் பயிரிடுவதற்கு சித்திரை, வைகாசி மாதங்களில் இறக்கைக் கலப்பை அல்லது மரக்கலப்பைக் கொண்டு 2 முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும்.
சாமை விதைப்பதற்கு கை விதைப்பு முறையில் 2½ ஏக்கருக்கு 12½ கிலோ போதுமானது. விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்ய 2½ ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானது.
சாமை சிறுதானிய பயிரினை 22½ சென்டி மீட்டர் மற்றும் 7½ சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம். 2½ ஏக்கர் நிலத்தில் 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி பின்னர் உழவேண்டும். தழை, மணி சத்துக்களை இட வேண்டும்.
குருத்து ஈ
சாமை சிறுதானிய பயிரில் வரிசை விதைப்பு செய்திருந்தால் இரண்டு முதல் மூன்று முறை இடை உழவு செய்து பின் ஒரு முறை கையினால் களை எடுக்க வேண்டும்.
கை விதைப்பு முறையில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும். முதல் முறை களை எடுத்தவுடன் அல்லது விதைத்த 20-ம் நாளில் மானாவாரி பயரில் வரிசைக்கு வரிசை 22½ சென்டி மீட்டர் மற்றும் செடிக்குச் செடி 7½ சென்டி மீட்டர் வைத்து பயிர் களைய வேண்டும்.
சாமை பயிரை பொதுவாக எந்த நோயும் தாக்குவதில்லை. குருத்து ஈ சாமையைத் தாக்கி விளைச்சலை மிகவும் பாதிக்கின்றது. இப்பூச்சியை கட்டுப்படுத்த விதைப்பைத் தள்ளிப்போடாது பருவமழை தொடங்கிய உடனே விதைக்கலாம்.
கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்யவும். விவசாயிகள் சிறுதானிய பயிர்களை (சாமை) பயிரிடுவதற்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.