14 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

வந்தவாசி அருகே நடந்த தீவிபத்தில் 14 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.

Update: 2023-08-08 18:45 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே மலையில் எரிந்த தீ குடிசைகளுக்கு பரவியதில் 14 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

குடிசை வீடுகள்

வந்தவாசியை அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் மலையடிவாரத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மலையில் உள்ள செடிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக கொளுந்து விட்டு எரிந்த தீ காற்றின் வேகம் காரணமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியதில் குடிசைகளிலும் பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்த வந்தவாசி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க போராடினர். 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது.

எனினும் 14 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. வீட்டிலிருந்த உபயோகப் பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது.

உயிர் தப்பினர்

அந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் கூலி வேலைக்கு சென்று இருந்த நிலையில் குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் அனைவரும் உயிர்தப்பினர்..

கடந்த சில வருடங்களாகவே மர்ம நபர்கள் மலையில் உள்ள செடிகளுக்கு தீ வைத்து விட்டு தப்பி விடுகின்றனர்.

தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வு நடைபெற்று வருவதாகவும், வனத்துறை அதிகாரிகள் முறையாக மலையை பாதுகாத்து மலைக்கு தீ வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்