ஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
சோழவரத்தை அடுத்த ஆரணி பேரூராட்சியில் உள்ள பாரதியார் தெருவில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் நேற்று தங்கள் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தனர். விளையாடி களைப்படைந்த சிறுவர்- சிறுமிகள் பழசாறு குடிக்கலாம் என நினைத்தனர்.
இதையடுத்து அனைவரும் சேர்ந்து பழச்சாறு தயார் செய்து குடித்தனர். அதில், ஜெல் சிலிக்கான் ஐஸ் கட்டியை கலந்து ஜூஸ் தயார் செய்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் பழச்சாறு குடித்த 14 பேர் ஒருவர் பின், ஒருவராக வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மயக்கம் அடைந்த அனைவரையும் மீட்டு ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பழச்சாறு குடித்த 14 பேர் வாந்தி, மயக்கம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.