பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.14½ லட்சம்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.14½ லட்சம் கிடைத்தது.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்க்கை அம்மன் தனி சன்னதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 7 இடங்களில் உண்டியல்கள் மற்றும் தங்க ரதத்திற்கு ஒரு உண்டியல் என மொத்தம் 8 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 23-ந்தேதி திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. நேற்று இந்த உண்டியல்கள் மற்றும் தங்கரத உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 8 உண்டியல்களில் மொத்தம் ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 160 ரொக்கம், 136 கிராம் தங்கம், 400 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தது. அறநிலையத்துறை துணை ஆணையர் உமாதேவி முன்னிலையில் செயல் அலுவலர் ஆறுமுகம், ஆய்வாளர்கள் கோகிலாதேவி, சுதாராமமூர்த்தி மற்றும் மாணவ, மாணவிகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.