ஓய்வு பெற்ற ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.14½ லட்சம் அபேஸ்

Update: 2022-08-26 19:35 GMT

மர்ம நபர் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்த ஓய்வுபெற்ற ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.14½ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.

கணக்கு நிர்வாக ஊழியர்

திருச்சி காட்டூர் கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து இருளப்பன் (வயது 61). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்கு நிர்வாக ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 15 வருடமாக வருமான வரி தாக்கல் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு செலுத்திய வரி தொகையை திரும்ப பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு மர்ம நபரிடம் இருந்து அவரது இ-மெயில் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது.

இதை நம்பிய அவர் அந்த மெயிலில் வந்த தகவலை கிளிக் செய்தார். வருமான வரித் துறை இணையப்பக்கம் போல் போலியான இணையப்பக்கத்திற்கு சென்றது. அதில் அவர் தனது பான் கார்டு, முகவரி உள்ளிட்ட வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது அதில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து மெசேஜ் அனுப்பி உள்ளார். சம்பவத்தன்று முத்து இருளப்பன் தனது வங்கி டெபிட் கார்டைப் பயன்படுத்தி பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டிருந்தபோது, ​​வங்கிக் கணக்கில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சைபர் கிரைம் போலீசில் புகார்

பின்னர் திருவெறும்பூரில் உள்ள அவரது வங்கிக்கு சென்று பார்த்தபோது, ​​அவரது கணக்கில் இருந்து ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்து 654-ஐ அந்த மர்ம நபர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து முத்து இருளப்பன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்