சென்னை அருகே வாகன சோதனையில் 14 கிலோ தங்க நகைகள் சிக்கின - உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு
சென்னை அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகள் சிக்கின. இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி தலைமையிலான போலீசார் தமிழ்நாடு-ஆந்திர மாநிலம் எல்லையான ஆரம்பாக்கம் ஏளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா போதை பொருட்களை கடத்தி வருவதை தடுக்க வாகனசோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பஸ் ஒன்றை நிறுத்தி அதில், கஞ்சா ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா? என போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 பைகளில் 14 கிலோ 500 கிராம் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர்.
அதில், பஸ்சில் பயணம் செய்த சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 45) மற்றும் காளிமுத்து (42) ஆகியோருக்கு சொந்தமான தங்கநகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் கிடுகிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர்கள் சேலத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியர்களாக வேலை பார்ப்பதாகவும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடைகளில் நகைகளின் டிசைன்களை காட்டி ஆர்டர் எடுத்துக்கொண்டு மீண்டும் சேலத்துக்கு திரும்பி சென்று கொண்டு இருந்ததாகவும், போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் நகைகளை கொண்டு வந்ததற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை வியாசர்பாடியில் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரூ.8 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து சென்னை வருமான வரித்துறை உதவி கமிஷனர் பாலச்சந்தரிடம் நேற்று ஒப்படைத்தனர். இது குறித்து 2 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.