ரூ.14¾ கோடி கொப்பரை கொள்முதல்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.14¾ கோடி கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
சுல்தான்பேட்டை
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.14¾ கோடி கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கொப்பரை கொள்முதல்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 15 லட்சத்து 60 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் பறிக்கப்படும் தேங்காய், இளநீர் ஆகியவை திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைக்கப்பட்டு கொப்பரைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
காங்கேயம், வெள்ளக்கோவில் போன்ற வெளி மார்கெட்டை விட அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை அதிகமாக உள்ளதால் சுல்தான்பேட்டை வட்டார தென்னை விவசாயிகள் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் கொப்பரைகளை விற்பனை செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
27,110 மூட்டைகள்
செஞ்சேரி(மலையடிபாளையம்) ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று வரை 986 விவசாயிகளிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 27 ஆயிரத்து 110 கொப்பரை மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.14 கோடியே 72 லட்சத்து 7 ஆயிரத்து 300 ஆகும். இந்த தகவலை ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.