132 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டையில் 132 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
தீவிர நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மச்சுவாடியில் ஒரு பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஒரு காரில் சோதனையிட்டதில் புகையிலை பொருட்கள் பேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து அதனை கடத்தி கொண்டு வந்த புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த ஆசாத் (வயது 23) உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 132 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அந்த புகையிலை பொருட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.