வேலூர் மாவட்டத்தில் 1,300 வாக்குச்சாவடிகள்

வேலூர் மாவட்டத்தில் 1,300 வாக்குச்சாவடிகள் கொண்ட வரைவு பட்டியலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டார்.

Update: 2023-08-21 18:39 GMT

வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024-க்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர், வயது, முகவரி திருத்தங்கள் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரையறை பணி

இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பு வாக்குச் சாவடிகள் வரையறை பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2-ஆக பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,300 வாக்குச்சாவடிகள் கொண்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வாக்குச்சாவடி

தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிமுறைகளின் படி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெயர் மாற்றம், பிரிவு மாற்றம், இருப்பிட மாற்றம், கட்டிட மாற்றம் உள்ளிட்டவைகளும் 5 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பான இந்த பட்டியல் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களில் அலுவலகங்களான மாநகராட்சி கமிஷனர், வேலூர், குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் வெளியிடப்படும்.

7 நாட்களுக்குள்..

இதில் திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலோ, புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்க வேண்டும் என்றாலோ அதை எழுத்துப்பூர்வமாக வாக்காளர் பதிவு அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், உதவி கலெக்டர் கவிதா, தாசில்தார் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்