வேலூர் மண்டலத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 130 சிறப்பு பஸ்கள்
வேலூர் மண்டலத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.;
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று விழா நடைபெறு வழக்கம். அதன்படி இந்த மாத ஆடி அமாவாசை விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.
இதையொட்டி வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 130 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 40 பஸ்கள், ஆற்காடு, திருப்பத்தூரில் இருந்து தலா 25 பஸ்கள், வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து 40 பஸ்கள் மேல்மலையனூருக்கு இன்று அதிகாலை முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த பஸ்நிலையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூருக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.