ஊட்டியில் காணப்பட்ட 13 வகையான வெளிநாட்டு பறவைகள்

நீலகிரியில் பறவைகள் கணக்கெடுப்பில், ஊட்டியில் 13 வகையான வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டன.

Update: 2023-02-03 19:00 GMT

ஊட்டி

நீலகிரியில் பறவைகள் கணக்கெடுப்பில், ஊட்டியில் 13 வகையான வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டன.

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு, ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்றது. கணக்கெடுப்புக்கு முந்தைய நாள் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீலகிரி வன கோட்டத்தில் 14 இடங்களில் சுமார் 30 தன்னார்வலர்கள், பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி படகு இல்ல ஏரியில் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்தது. இதேபோல் மார்லிமந்து, வெலிங்டன், எமரால்டு பகுதியிலும் பறவைகள் அதிக அளவில் இருந்தன. இதுகுறித்து வனத்துறை அலுவலர் மற்றும் பறவை ஆர்வலர்கள் கூறியதாவது:-

600 பறவைகள்

சதுப்பு நிலங்களில் மட்டும் நடந்த இந்த பறவைகள் கணக்கெடுப்பில் நீலகிரியில் 35 வகையான பறவை இனங்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஊட்டி ஏரியில் மட்டும் 26 வகை பறவை இனங்கள் மற்றும் 600 பறவைகள் காணப்பட்டன. இதில் ஆற்று உள்ளான், தட்டை வாயன் உள்பட 13 வகையான பறவைகள் வெளிநாட்டை சேர்ந்தவைகள் என்பது சிறப்பம்சமாகும். குறிப்பாக இங்கு 6 வகையான வாத்து இனங்கள் அடையாளம் காணப்பட்டதில், 5 வகை வாத்து இனங்கள் வெளிநாட்டை குறிப்பாக ஐரோப்பிய பகுதியை சேர்ந்தவையாகும்.

ஐரோப்பா முழுவதும் கடுமையான பனி நிலவுவதால் அவை உணவு மற்றும் ஈர நிலங்களுக்காக இந்த இடத்தை தேடி வந்துள்ளன. இவை இங்கு 6 மாதம் தங்கி இருந்து மீண்டும் செல்லும்.

நடவடிக்கை

அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக ஊட்டி ஏரி அதிகமாக மாசுபடும் சூழ்நிலை இருந்தாலும், மாவட்டத்தில் அதிக அளவில் பறவைகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் இருந்து வரும் கழிவு நீர் அதிக அளவில் மாசுபட்டால் ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழல் தன்மை பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த பறவை இனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே இது பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாக அறிவிக்கப்பட வேண்டும், இங்கு பல்லுயிர் பெருக்கத்தை பராமரிக்கும் வகையில், நீர் சுத்திகரிப்பு பணிகளில் கூடுதல் தொழில் நுட்பங்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், சமவெளி மற்றும் குறைந்த உயரத்தில் உள்ள ஈரநிலங்களைக் காட்டிலும் மலை ஈரநிலங்களில் பறவைகளின் பல்லுயிர்ப் பெருக்கம் கணிசமாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் பறவையினங்கள் மற்றும் உயிரினங்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணிகள் தீவிர படுத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்