அதிக விலைக்கு விற்பனை செய்ததால் 13 தனியார் உரக்கடைகளுக்கு தடை
திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ததால் 13 தனியார் உரக்கடைகளுக்கு தடை விதித்துவேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ததால் 13 தனியார் உரக்கடைகளுக்கு தடை விதித்துவேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பா சாகுபடி
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பணியிலும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் தாளடி நெல் சாகுபடி பனியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மிகுந்த பாதிப்படைந்தனர்.
மழை நின்றதால் விவசாய நிலத்தில் தேங்கி இருந்த தண்ணீரை வடிய வைத்து நெல் பயிர்களுக்கு உரம் தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
13 உரக்கடைகளுக்கு தடை
அதன்படி திருவாரூர் மாவட்டம் காப்பனாமங்கலம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடையில் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கடையில் உரம் விற்பனை செய்ய தடை விதித்து வேளாண்மைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதேபோல் கூடுதலாக உரம் விற்ற 12 கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேளாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.