தூத்துக்குடியில் இருந்து சின்னசேலத்துக்கு 1289 மெட்ரிக் டன் உரம்

தூத்துக்குடியில் இருந்து சின்னசேலத்துக்கு 1289 மெட்ரிக் டன் உரம் ரெயில் மூலம் வந்தது.

Update: 2023-05-04 18:45 GMT

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் கரும்பு, நெல், மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பயிா்களுக்கு தேவையான 1,289.2 மெட்ரிக் டன் யூரியா, சூப்பர் பாஸ்பேட், காம்பளக்ஸ், டி.ஏ.பி. உரம் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு வந்தன. இந்த உர மூட்டைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி தலைமையில், துணை இயக்குனர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 710.33 மெட்ரிக் டன் யூரியா, 318.8 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 60.85 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட், பெரம்பலூர் மாவட்டத்திற்கு 48.83 மெட்ரிக் டன் யூரியா, 23 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், அரியலூர் மாவட்டத்திற்கு 31.95 மெட்ரிக் டன் யூரியா, 16 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிக்கு 54.45 மெட்ரிக் டன் யூரியா, 25 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களை லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 7 ஆயிரத்து 398 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,895 மெட்ரிக் டன், பொட்டாஷ் 262 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,105 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 8 ஆயிரத்து 502 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை கொண்டு பதிவு செய்து, மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு உரங்களை பெற்று பயனடையுமாறு வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்