காற்று மாசுபாட்டை தவிர்க்க ரூ.2½ கோடியில் 126 பேட்டரி குப்பை வண்டிகள்
காற்று மாசுபாட்டை தவிர்க்க ரூ.2½ கோடியில் 126 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
காற்று மாசுபாட்டை தவிர்க்க ரூ.2½ கோடியில் 126 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
பேட்டரி குப்பை வண்டி
ஈரோடு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில், குப்பைகளை அகற்ற லாரி, டிராக்டர், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றால் எரிபொருள் மற்றும் கூடுதல் பராமரிப்பு செலவு ஏற்பட்டு வந்தது. இந்த செலவை தவிர்க்கவும், காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கிலும் மின்கல (பேட்டரி) குப்பை வண்டிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.4 கோடியே 24 லட்சம் மதிப்பில் 221 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்க திட்டமிடப்பட்டது. ஊரக வளர்ச்சி துறை மூலமாக, மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் தாளவாடி தவிர மற்ற 13 ஒன்றியங்களிலும் இந்த குப்பை வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தாளவாடி ஒன்றியம் முற்றிலும் மலைப்பகுதியாக உள்ளது. அங்கு பேட்டரியில் சார்ஜ் செய்து, மின்கல வண்டியை, குப்பை லோடு ஏற்றி இயக்குவது சிரமம் என்பதால், அந்த ஒன்றியத்துக்கு மட்டும் பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கவில்லை. தாளவாடி நீங்கலாக, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட 13 ஒன்றியங்களிலும், தேவையின் அடிப்படையில் முதல் கட்டமாக 221 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டது.
எரிபொருள் செலவு மிச்சம்
இதில் தற்போது ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் 126 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதன்படி ஈரோடு ஒன்றியத்தில்-8, மொடக்குறிச்சி -32, கொடுமுடி -17, பெருந்துறை -20, அம்மாபேட்டை -10, அந்தியூர் -8, கோபி -11, டி.என்.பாளையம் -10, பவானிசாகரில் -10 வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், 95 வண்டிகள் குப்பைகள் அள்ளுவதற்கு ஏற்றவாறு அதன் கட்டமைப்பில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலமாக எரிபொருள் செலவு மிச்சமாகிறது. மின்சாரத்தில் சார்ஜ் செய்வதால், பெரிய செலவு ஏற்படுவதில்லை. முக்கியமாக காற்று, ஒலி மாசுபாடு ஏற்படாது.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே மாநகராட்சி, சில நகராட்சிகளில் குறைந்த எண்ணிக்கையில் இதுபோன்ற பேட்டரி குப்பை வண்டிகள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களை மாற்றும்போது, அதற்கு பதிலாக வரும் காலங்களில் இதுபோன்ற மாசற்ற, எரிபொருள் செலவற்ற பேட்டரி வண்டிகளை வாங்க ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.