இணையதளம் மூலம் வாலிபர் இழந்த ரூ.1.25 லட்சம் மீட்பு

இணையதளம் மூலம் வரன் தேடிய வாலிபர் இழந்த ரூ.1.25 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

Update: 2022-06-27 19:44 GMT

நெல்லை மாவட்டம் பழவூர் ஆவரைகுளத்தை சேர்ந்தவர் தங்கப்பன் (வயது 36). இவர் தனது திருமணத்துக்கு வரன் தேடுவதற்காக இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த இணையதளம் மூலம் பெண் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை மோசடியாக பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அந்த பெண் கூடுதலாக பணம் கேட்டதால் சந்தேகமடைந்த தங்கப்பன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிட்டார்.

சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையில், தங்கப்பனிடம் ஆண் ஒருவர் பெண்ணை பேச வைத்து பணம் பறித்ததும், அந்த பணம் வட மாநிலத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வங்கி கணக்கை முடக்கினர். பின்னர் வங்கியின் மேலாளரை தொடர்பு கொண்டு அந்த பணத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட பணத்தை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தனது அலுவலகத்தில் வைத்து தங்கப்பனிடம் வழங்கினார். மேலும் அவர் பொதுமக்கள் ஆன்லைன் மோசடிகள் குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், தங்களது முழு விவரங்களை தெரியாத நபர்களிடம் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்