காணாமல்போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 122 செல்போன்கள் மீட்பு

விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 122 செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

Update: 2023-06-20 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாகவும், திருட்டுப்போனதாகவும், வழிப்பறி செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள், புகார்கள் தெரிவித்தனர்.

இந்த புகார் மனுக்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், சைபர் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி, போலீசார் இளங்கோவன், செல்வி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

122 செல்போன்கள் மீட்பு

இந்த தனிப்படை போலீசார், விரைந்து விசாரணை மேற்கொண்டு செல்போன்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர், காணாமல்போன செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதன் அடிப்படையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 122 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கலந்துகொண்டு 122 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க உதவியாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 890 செல்போன்கள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் வரப்பெற்றன. புகார்களின்பேரில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 79 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு மே மாதம் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் 56 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது 122 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள செல்போன்களை மீட்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது என்றனர். இந்நிகழ்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜ், சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்