கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 121 பேர் கைது
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 121 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜனதாவினர் போராட்டம்
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திரண்ட பா.ஜனதாவினர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு செண்பகவல்லி அம்மன் கோவிலை முற்றுகையிட முயன்றனர்.
செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் சென்ற பா.ஜனதாவினரை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கிழக்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
121 பேர் கைது
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா, வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் உள்ளிட்ட 121 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.