சுதந்திரதின பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்

குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட உள்ளனர்.

Update: 2023-08-09 19:01 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட உள்ளனர்.

சுதந்திர தின விழா

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் கடந்த ஆண்டை போல் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்ற தயாராகி வருகிறார்கள்.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசியக் கொடி ஏற்றுகிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அணிவகுப்பு ஒத்திகை

விழாவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. முதற்கட்டமாக மைதானத்தில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. அங்கு வளர்ந்திருந்த புற்கள் வெட்டப்பட்டு சிறு, சிறு பள்ளங்களில் மண் போடும் பணி நடக்கிறது. இதைத் தொடர்ந்து மேடை அமைத்தல், கழிவறை வசதி, பாதுகாப்பு ஏற்பாடு பணி நடைபெற உள்ளது.

இதற்கிடையே போலீசார் அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டு அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், தேசிய மாணவர் படையினரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

அதே சமயத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணிக்கு 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

முக்கிய பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. அதோடு விழா நடைபெற உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட இருக்கிறது. மேலும் கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்