தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு;

Update:2022-12-05 00:07 IST

தமிழகத்தில் மீன்பிடிதுறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பாபநாசத்தில், மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து புறப்பட்டு திண்டிவனம், விழுப்புரம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை வழியாக இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நிறுத்தாமல் இயக்கப்பட்டு வந்தது. தஞ்சை மாவட்டத்தின் மிக முக்கிய பகுதியாக பாபநாசம் உள்ளதால் அங்குள்ள மக்கள் திருச்செந்தூா் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க தஞ்சைக்கு சென்று அங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இதனால் பாபநாசம் பகுதி பயணிகள் நலன் கருதி திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பாபநாசத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

தொடக்க விழா

இந்தநிலையில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ெரயிலை நிறுத்தி இயக்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி தென்னக ெரயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் தலைமை தாங்கினாா். முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் ஹரிகுமார் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.

கல்யாணசுந்தரம் எம்.பி., பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றினார். பின்னர் திருச்செந்தூா் எக்ஸ்பிரஸ் ரெயிலை பாபநாசத்தில் நிறுத்தி இயக்கப்படுவதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கடல்பாசி பூங்கா

பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்துக்கு பல ரெயில்வே திட்டங்களை அளித்துள்ளார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டு வசதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ெரயில்களில் பயோ டாய்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் ரெயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திரமோடி மிகவும் கவனமுடன் செயல்பட்டு அதிக அளவு நிதி ஒதுக்கி உள்ளார்.

கடல்பாசி என்பது தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடல்பாசி உற்பத்தியை பெருக்குவதற்கு ராமநாதபுரம், மண்டபம் பகுதிக்கு கடல்பாசி பூங்காவை வழங்கி உள்ளார்.இது குறித்து தமிழக அரசு ரூ.126 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. இந்த திட்ட மதிப்பீடு தற்போது பரிசீலனையில் உள்ளது.

ரூ.1200 கோடி

மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் நிதியின் கீழ் தமிழகத்துக்கு மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவொற்றியூரில் ரூ.150 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் துறைமுக பணி 90 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது.

செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்துக்கும் இடையே மீன்பிடி துறைமுகம் மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கி உள்ளோம். விசாகப்பட்டினம், ஒடிசா, கொச்சின், சென்னையில் காசிமேடு ஆகிய 4 துறைமுகங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ரூ.100 கோடியில் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மத்திய மந்திாி எல்.முருகன் கூறினாா்.

விழாவில் பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பார்வையாளர் பண்ண வயல் இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், பாபநாசம் ஒன்றிய தலைவர்கள் செல்வம், குமார், பாபநாசம் நகர தலைவர் மணிகண்டன், பண்டாரவடை திமுக பிரமுகர் நவநீதகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ஜெயக்குமார், சேதுராமன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்