சாலைமறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது
வேலூர், அரியூரில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர், அரியூரில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலைமறியல்
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று அங்கு தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.லதா தலைமை தாங்கினார். ஏழுமலை, காவேரி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார திருத்த மசோதாவை திருப்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், சொத்து வரி, வீட்டுவரி, மின்கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டத்தை ஆதரித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம், உழைக்கும் பெண்கள் இயக்கத்தினர் இணைந்து அரியூர் அருகே உள்ள ஸ்ரீபுரத்தில் உள்ள தபால் நிலையம் அருகே மறியல் போராட்டத்தை நடத்தினர். உழைக்கும் பெண்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆல்வின், துணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சிம்புதேவன் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.
முதலாளிகளுக்கு ஆதரவான வரி கொள்கையால் வரலாறு காணாத விலையேற்றம் என குற்றம் சாட்டிய அவர்கள் அரிசி, பருப்பு, தயிர் போன்ற அத்தியாவசிகள் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு நகர ஒன்றிய செயலாளர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.பன்னீர்செல்வம், ஜி. எஸ்.மூர்த்தி, கல்பனாசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட மையத்தின் நிர்வாகி துரைசெல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உட்பட 86 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.