120 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

சிவகாசி அருகே ரேஷன் கடையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 120 மூடை அரிசிகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

Update: 2022-10-21 18:45 GMT

சிவகாசி

சிவகாசி அருகே ரேஷன் கடையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 120 மூடை அரிசிகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

ரகசிய தகவல்

சிவகாசி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் நாகலாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்திய போது அந்த வாகனம் நிற்காமல் சென்றது. பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் உறுதி செய்தனர்.

3 பேர் கைது

அந்த வாகனத்தில் இருந்த வெம்பக்கோட்டையை சேர்ந்த குமார்(வயது 35), மேலதிருவேங்கடத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த முத்தையாபாண்டி தப்பியோடி விட்டார். இந்த கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த திருவேங்கடத்தை சேர்ந்த சீனிபாண்டி(45) என்பவர் அவரது காரில் அரிசி கடத்தல் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடிவிட்டார். ஆனால் காரை ஓட்டி வந்த திருவேங்கடத்தை சேர்ந்த சந்தனமாரி (21) மட்டும் போலீசில் சிக்கினார். காரில் ரூ.25 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

120 மூடைகள்

சரக்கு வாகனத்தில் தலா 50 கிலோ கொண்ட 120 மூடைகள் இருந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசி பகுதியில் இருந்து ரேஷன் அரிசிகள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

எனவே ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும், அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்