காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் 12 வயது சிறுவனை கடத்தி சென்றதால் பரபரப்பு
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் 12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர், காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் தனது 12 வயது தம்பியுடன் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செல்ல பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 35 வயதுமதிக்கத்தக்க நபர் ராஜபாண்டி வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு, சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சிட்டாக பறந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வாலிபர் தன் தம்பியை தூக்கிக் கொண்டு செல்கின்றார்கள் என கூக்குரலிடவே, அங்கிருந்த பயணிகள் சிலர் சிறுவனை கடத்தி சென்ற நபரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. அப்போது, வாலிபரிடம் இது தொடர்பாக கேட்டபோது, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தான் 10-வது படித்துவிட்டு காஞ்சீபுரம் அடுத்துள்ள காரை பகுதியில் மிக்சர், உள்ளிட்ட கார வகைகள் உற்பத்தி செய்யும் இளையராஜா என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தேன்.
அப்போது என்னுடைய பெற்றோர்கள் இளையராஜாவிடம் வாங்கிய கடனை என்னுடைய சம்பளத்தில் கழித்து விட்டார்கள். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு 12 வயதான என்னுடைய தம்பியையும் அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.
என்னை போல் என் தம்பியும் கஷ்டப்படக் கூடாது என்பதால் கடை உரிமையாளருக்கு தெரியாமல் நானும் என் தம்பியும் கிளம்பி வந்துவிட்டோம். இப்போது, பஸ்ஸ்டாண்டுக்கு வந்து இளையராஜா என்னுடைய தம்பியை தூக்கி சென்று விட்டார் என அழுது கொண்டே கூறினார். இதனைத் தொடர்ந்து பஸ் நிலையத்துக்குள் பணம் கேட்டு ஒரு சிறுவனை கடத்தி விட்டார்கள் என செய்தி வேகமாக பரவியதால் சம்பவ இடத்துக்கு வந்த சிவகாஞ்சி போலீசார் வாலிபரை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றனர்.
பின்னர் இளையராஜாவை தொடர்பு கொண்டு சிறுவனை அழைத்து வருமாறு உத்தரவிட்டனர். காவல்நிலையம் வந்த இளையராஜாவிடம் சைல்ட் லைன், குழந்தைகள் கடத்தல்-பாதுகாப்பு துறையினர், உளவுத்துறையினர் ஆகியோர் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். பின்னர் சகோதரர்கள் இருவரையும் மீட்டு செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலக் குழும அதிகாரிகள் கொடுக்கும் விசாரணை அடிப்படையிலான புகாரின் பேரில், கடை உரிமையாளர் இளையராஜா உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.