கொடைரோடு அருகே இருதரப்பினர் மோதல்; 12 பேர் கைது

கொடைரோடு அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-18 21:00 GMT

கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி ஜெ.ஊத்துப்பட்டியில் உள்ள கருப்பணசாமி கோவில் அருகே ஒரு தரப்பினர் புதிதாக விநாயகர் கோவில் கட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, மற்றொரு தரப்பை சேர்ந்த ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் சிவராமன் (வயது 50), கோபாலகிருஷ்ணன் (50), தெய்வேந்திரன் ஆகியோர் அங்கு வந்து கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிவராமன் தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனவேல் (60) தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சிவராமன், பழனிசாமி (50), வேல்முருகன் (45), அங்குபொன்னு (55) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ரவி (55), சுரேஷ் (24), ராமசாமி (44) மற்றும் தனவேல், லட்சுமணன் (55), மாரிமுத்து (47), பாலாஜி (40), செல்வராஜ் (20), ராமகிருஷ்ணன் (44), சக்திவேல் (30), அருள் (30) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்